கட்டுரைகள்ஜல்லிக்கட்டு

களம் காணும் காளைகள் ஓர் பார்வை

Jallikattu Kaalai Paarvai - Tamil Jallikattu

இன்றைய தலைமுறைக்கு ஜல்லிக்கட்டு குறித்து தெரிந்திருக்கும் அளவிற்கு காளைகளின் வரலாற்றினை அறிந்து கொள்ள முயல்வதில்லை. ஜல்லிக்கட்டு என்பது ஒரு வீர விளையாட்டு என்றபோதிலும், அது விளையாட்டான விசயம் அல்ல. பழங்காலத்தில் காளைகளுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையாகும். அதன் வீரத்தை அறிந்து கொள்ள நடைபெற்ற விளையாட்டாகும். மனிதன் அறிவில் மட்டுமே பலமானவன் என்பதை தாண்டி, உடலிலும் பலம் மிக்கவன் என்பதை எடுத்துரைக்கும் விளையாட்டாகவே ஜல்லிக்கட்டு அமைந்தது. சரி, நாம் முதலில் ஏறுதழுவல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு, களம் காணும் காளைகள் குறித்து தெரிந்து கொள்வோம். (Tamil Jallikattu)

காளைக்கு எருது என்ற பெயரும் உண்டு. எருதின் கழுத்திற்கும், முதுகிற்கும் நடுவில் உயர்ந்த மலை முகடுபோன்ற திமிலும், அதன் வாய்ப்புறம் முதல் முன்னால்கள் வரை தொங்கும் சதையும் உள்ள ஆண் மாடு காளை ஆகும்.

விவசாய தொழில் செய்து வந்த நாம், இப்படிப்பட்ட காளைகளை இனப் பெருக்கத்திற்கும், நிலத்தை உழுவதற்கும், போக்குவரத்திற்கும், சுமை ஏற்றவும் கமலம் (நீர்) இறைப்பதற்கும் அதிகம் பயன்படுத்தினோம். இன்றைக்கும் இதில் உழுவதற்கும், சுமை ஏற்றுவதற்கும் காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவும் இந்த தலைமுறையோடு நின்றுபோனால் ஆச்சர்யமில்லை. (Tamil Jallikattu)

ஆண்டுக்கு ஒருமுறை ஏறுதழுவல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற வீர விளையாட்டிற்காக காளைகளைப் பழக்கப்படுத்துவது அக்காலத்தின் வழக்கம். அவைதான் இன்றும் தொன்றுதொட்டு உள்ளது. கிராமங்களில் உள்ள கோயில்களில் காளை மாட்டை நேர்த்திக்கடனுக்காக விடுவதுண்டு. அந்த காளைகளில் வீரம் அதிகமிருந்தும் , ஊர் மக்களை எந்த வகையிலும் தீங்கு செய்வதில்லை. இன்றைக்கும் நாம் கிராமங்களில் கோயில் காளைகளை பார்க்கலாம். (Tamil Jallikattu)

பால் வியாபாரத்திற்காக மாடுகள் வளர்ப்பவர்கள், காளைகள் வைத்து அவர்களுக்கு பெரிய பயன் ஒன்று கிடையாது என்ற காரணத்தினால் அழிய ஆரம்பித்தது காளையினங்கள். வர்த்தகம் என்பது ஒரு வர்க்கத்தை அழிக்கும் தன்மை கொண்டது என்பதற்கு காளைகள் நல்ல உதாரணம்.. ஏனெனில் அவைகளுக்கு தீனி போடுவதற்கு அவர்களிடம் பொருளாதாரம் இடம் அளிக்காத காரணத்தினாலும், எருதுக் கன்று பிறப்பதை விரும்புவதில்லை.

அப்படியே பிறந்தாலும் அவைகள் கன்றாக இருக்கும்போது இறைச்சிக்காக விற்றுவிடுகின்றனர். வசதி உள்ளவர்கள் மட்டும் விவசாயத்திற்கும், இனச்சேர்க்கைக்கும், போக்குவரத்துக்கும், சுமை தூக்குவதற்கும் மட்டுமே காளை மாடுகளை வளர்த்துவந்தனர். ஒரு காளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விசயம் அல்ல. அதற்கான உணவுச் செலவு அன்றைக்கே விழி பிதுங்க வைத்துள்ளது.

காங்கேயம் காளை, உம்பளச்சேரி காளை, புளியங்குளம் காளை, பர்கூர் காளை மற்றும் தேனி மலை மாடுகள் ஆகியவை தமிழகத்தின் பெருமையையும், மரபையும் தூக்கிப் பிடிப்பவையாகும். தமிழ் மண்ணின் அடையாளமாகத் திகழ்ந்து வந்த காளையினங்களில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த ஆலம்பாடி காளையினம். இன்று அந்த காளையினம் மறைந்துவிட்டது. கி.மு. 3000 – 2500 ஆண்டிற்கு இடைப்பட்ட சிந்து வெளிப் பகுதியில் கிடைத்த பல முத்திரைகளில் காளை உருவம் பொறித்த முத்திரைகள் தொல்லியலாளர்களுக்கு அதிகம் கிடைத்துள்ளது மிகப் பெரிய சான்றாகும். (Tamil Jallikattu)

அதேபோல் சைவ சயமத்தில் காளையை நந்தி எனப் போற்றுவதுண்டு. உலகின் அனைத்து சிவாலயங்களின் சிவன் சன்னதிக்கு எதிராக காளை, நந்தி எனும் வடிவத்தில் அமைந்த சிற்பம் இருக்கும். காளை அனைத்து சிவகணங்களுக்கும் தலைவர் எனும் முறையில் அதிகார நந்தி என அழைக்கப்படுவர். மேலும் காளையானது சிவ பார்வதியின் வாகனமாகவும் அமைந்துள்ளதுடன், கயிலை மலையின் தலைமைக் காவலராகவும் உள்ளது. முக்கியமாக அனைத்து சிவாலயங்களின் திருவிழாக்களின்போது, கொடி கம்பத்தில் காளையின் உருவம் பொறித்த கொடி ஏற்றப்படுவதற்கு காரணம் இதுதான்.

அக்காலத்தில் ஏறுதழுவல் போட்டியில் தாம் வளர்க்கும் காளையை அடக்கும் இளைஞருக்கு, அவர் தம் மகளை திருமணம் செய்து வைப்பது என்பது தமிழரின் பண்பாட்டில் இருந்து வந்த ஒரு செயலாகும். அது ஒரு பெருமைக்குரிய திருமணமும் ஆகும். இந்த பழக்கம் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது.மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் காளையை அடக்கிய இளைஞருக்கு பெண் கொடுத்த கதைகள் பல உண்டு.  (Tamil Jallikattu)

நகரமயமாதல், நவீன வாகன வசதிகள், இயந்திரமயமான வேளாண்மை, ஜல்லிக்கட்டிற்கு எதிரான போக்குகள், கிராமப்புறங்களின் காளைகளை பராமரிக்க இயலாத நிலை ஆகிய காரணங்களால் காளை இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி இன்று அழியும் விழும்பில் உள்ளது. காளைகளை இறைச்சிக்காக மட்டும் வளர்க்கும் சூல்நிலை இந்தியாவில் உருவாகிவிட்டது. சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி அறக்கட்டனையின் நிர்வாக அறங்காலரான கார்த்திகேய சிவசேனாதிபதி போன்றவர்களால் காங்கேயம் காளைகள் இன்னும் தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நாம் ஒருபோதும் மறக்க வேண்டாம்.

தமிழ் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு குறித்த அனைத்து தகவல்களும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தில் துவக்கப்பட்டதே "தமிழ் ஜல்லிக்கட்டு" இணையதளம். எங்களுடன் நீங்களும் பயணிக்கலாம். ஜல்லிக்கட்டு குறித்து கட்டுரைகள், தகவல்களை வழங்கலாம். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tamiljallikattu2020@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Copy Wirte Tamil Jallikattu !!